Last Updated : 21 Jun, 2021 05:00 PM

 

Published : 21 Jun 2021 05:00 PM
Last Updated : 21 Jun 2021 05:00 PM

பரமக்குடியில் சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு 

பரமக்குடியில் சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் தார் பிளாண்ட் நிறுவனம் வைத்துள்ளார்.

இவர் கடந்த வாரம் சசிகலாவிடம் போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வின்சென்ட் ராஜா நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது தார் பிளாண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி விடுமுறை என்பதால் நேற்று இரவு நிறுவனத்தில் தனது காரை நிறுத்திவிட்டு வின்சென்ட் ராஜா உறங்கியுள்ளார். நள்ளிரவு 2.45 மணி அளவில் மிகப்பெரிய சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது சொகுசு கார் கொழுந்துவிட்டு எரிந்தது.

மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி சொகுசு காரை கொளுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் அவரது கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து குற்றப்பிரிவு டிஎஸ்பி திருமலை, இன்ஸ்பெக்டர் அமுதா உள்ளிட்ட பரமக்குடி தாலுகா போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலம் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பரமக்குடியில் சசிகலா ஆதரவாளரின் வாகனம் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வின்சென்ட் ராஜா கூறும்போது, ''சசிகலாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். எனது நிறுவனத்தில் இன்று காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இச்சம்பவத்தை நடத்தி உள்ளனர். முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி இருவரும் உறவினர்கள். இவர்களை தவிர வேறு யாரும் எனது நிறுவனத்தில் இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியாது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது'' எனக்கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x