

கழுகுமலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
கழுகுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் ஆய்வாளர் சோபா ஜென்சிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீஸார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் கண்ணன் (27) என்பவரது வீட்டருகே உள்ள குடோனை சோதனை செய்த போது, 16 மூடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் கண்ணனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 437 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இன்று காலை கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த எஸ்.பி.ஜெயக்குமார், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில், இந்தாண்டு இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 685 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 3,800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 77 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள்.
ஊரடங்கு காலத்தில் அவசிய தேவைகளின்றி வெளியே சுற்றிய இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் என 9,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மூலமே நடைபெறுகிறது. அதே போல், தற்போது கரோனா காலம் என்பதால் காவலர்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது.
காவலர்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 92 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கி தினமும் அவர்களுடன் பேசி, உடல்நிலையை குறித்து கேட்டு அறியப்படுகிறது.
நானும் அவர்களுடன் பேசி, உதவி தேவைப்பட்டால் அணுகும்படி கூறி வருகிறேன். காவலர்களுக்கு குறை இருந்தால், உடனடியாக என்னை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம், என்றார் அவர்.
தொடர்ந்து, கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு கரோனா கால நிவாரண பொருட்களை எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார். அப்போது, டி.எஸ்.பி.க்கள் கலைக்கதிரவன், பிரகாஷ், ஆய்வாளர்கள் சபாபதி, தங்கராஜ், சோபா ஜென்சி மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.