

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு அமைத்து, அதன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்துவந்த குரூப் அட்மின் உட்பட 2 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெளிமாநில மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து மதுபான வகைகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை பாக்கெட்டுகளில் அடைத்து, அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில், மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்து வருகின்றனர். ரயில்வே காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அனைத்து ரயில் நிலையங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், காவல் துறையினரிடம் சிக்காமல் மதுபானங்களைத் தடையின்றி விற்பனை செய்ய திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த ஒருசிலர், தங்களது செல்போன்கள் மூலம் வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அதில் மதுப்பிரியர்கள் சுமார் 200 பேர் இணைக்கப்பட்டு, அதன் மூலம் மதுபானங்கள் தேவைப்படுவோர் தங்களது விருப்பதை அந்தக் குழுவில் பதிவிட்டால், குரூப் அட்மின் மூலம் மதுபானம் கேட்பவருக்கு அவரது இருப்பிடத்துக்கே சென்று விநியோகம் செய்யும் நூதன விற்பனை முறை கடந்த சில நாட்களாக நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இது தொடர்பாக, தகவல் நேற்று (மே 31) இணையதளம் மூலம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் உத்தரவு பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனிச்செல்வம் தலைமையிலான போலீஸார், வாட்ஸ் அப் குழு மூலம் மது விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து விவரம் சேகரித்தனர்.
இதையறிந்த மதுபான விற்பனை செய்யும் கும்பல் அந்த வாட்ஸ் அப் குழுவை உடனடியாகக் கலைத்தது. இருப்பினும், போலீஸார் நடத்திய தீவிர விசாணையில், வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (27) என்பவர்தான் வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி, அதன் மூலம் மதுபான வகைகளை விற்பனை செய்து வந்ததும், அதற்கு நியூடவுன் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகர போலீஸார் ஜனார்த்தனன் மற்றும் சரவணன் ஆகியோரை இன்று (ஜூன் 01) கைது செய்தனர். இது தொடர்பாக, மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த நகர போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஜோலார்பேட்டை போலீஸார் கட்டேரி அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மாலதி (29) என்பவரும், மூக்கனூர் அடுத்த பாரண்டப்பள்ளி சிலிப்பி வட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் (26) என்பவரும், தங்களது வீட்டின் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்துவருவது தெரியவந்தது.
அதன் பேரில், அவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராய பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.