கடந்த ஒரு வாரத்தில் ரயில்கள் மூலம் மதுபாட்டில் கடத்திய 42 பேர் கைது
கடந்த ஒரு வாரத்தில் ரயில்கள் மூலம் மதுபாட்டில்களைக் கடத்தி வந்த 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று (மே 31) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே, மதுப்பிரியர்கள் விருப்பத்தின் பேரில், வெளிமாநிலங்களில் இருந்து மதுபானக் கடத்தல் ரயில்கள் மூலம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் பேரில், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரயில்வே காவல் துறையினர் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த 24-ம் தேதி முதல் மே 31-ம் தேதி (இன்று) வரை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் மது வகைகளைக் கடத்தி வந்த 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கடந்த 7 நாட்களில் 1,541 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல் துறையினரின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்துக் குற்ற நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்கள் ரயில்வே மைய எண்ணான 1512 மற்றும் 99625-00500 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
இது தவிர, ரயில் பயணத்தின்போது காணாமல் போன குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், தனியாகத் தவிக்கும் குழந்தைகள் பற்றிய தகவல்களை 'காவலன்' செயலி மூலம் ரயில்வே காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்".
இவ்வாறு ரயில்வே துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
