

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் தெற்கு கடற்கரையில் கடல் அரிப்பினால் மணலில் அடுத்தடுத்து 4 எலும்புக்கூடுகள் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் மீனவ கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் கடற்கரைப் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்து 4 எலும்புக் கூடுகள் வெளியே வந்தன. இதனையடுத்து அந்தப் பகுதி மீனவர்கள் வாலிநோக்கம் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
உடனே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து அந்தப் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.
சனிக்கிழமை கடலாடி வட்டாச்சியர் (பொறுப்பு) மரகதமேரி, வாலிநோக்கம் காவல் ஆய்வாளர் முருகதாஸ், கைரேகை நிபுணர் வினிதா ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை சோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.