திருச்சுழி அருகே பூசாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூசாரி ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேவையும் காரணமும் இன்றி வெளியே வாகனங்களில் வருவோரை போலீஸார் ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர். இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி- கமுதி சாலையில் அபிராமம் சாலை சந்திப்புப் பகுதியில் வீரசோழன் எஸ்.ஐ. முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பி, தப்பிச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர்கள் அம்மன் சிலை ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
சந்தேகம் அடைந்த போலீஸார், பிடிபட்ட இருவரையும் நரிக்குடி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பழனிச்சாமி, கூறிப்பாண்டி என்பதும், அவர்கள் கட்டடத் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. அத்துடன், அவர்கள் வைத்திருந்தது ஐம்பொன் சிலை என்பதும் தெரியவந்தது.
போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில், இவர்களது கூட்டாளியான மினாக்குளத்தைச் சேர்ந்த பூசாரி சின்னையா என்பவர் வீட்டில் மேலும் 3 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பூசாரி சின்னையா வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் மற்றொரு அம்மன் சிலை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, பூசாரி சின்னையா மற்றும் அவரது நண்பர் பழனிமுருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் ஐம்பொன் சிலைகளை இவர்கள் விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதோடு, இவர்கள் 4 பேரும் சிலைகளைத் திருடினார்களா அல்லது கடத்தி வந்தார்களா என்பது குறித்தும், வெளிநாடுகளுக்கு விற்பதற்காகத் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்தும் நரிக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
