கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, வெடிக்கச் செய்து யூடியூபில் வெளியிட்ட 2 சிறுவர்கள் கைது

கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, வெடிக்கச் செய்து யூடியூபில் வெளியிட்ட 2 சிறுவர்கள் கைது
Updated on
1 min read

கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்ட இரு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன், வாத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். அப்போது அந்த சிறையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும் அங்கிருந்துள்ளார். அப்போது நாட்டு வெடி தயாரிப்பது தொடர்பாக யூடியூபில் பார்க்கலாம், அதனைப் பதிவு செய்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சில நாட்களுக்கு முன் வெளியே வந்த முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த சிறுவன், சாக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவனுடன் சேர்ந்து கடந்த 13-ம் தேதி வீட்டிலிருந்து தீபாவளி வெடியை எடுத்து அதிலுள்ள மருந்துகளைக் கொண்டு, சணல், காகிதங்களைப் பயன்படுத்தி விளையாட்டாக நாட்டு வெடி தயாரித்துள்ளனர். அத்துடன் அதனை வெடிக்க வைத்தும் பார்த்துள்ளனர். இதனை அப்படியே வீடியோவாக எடுத்து யூடியூபிலும் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, நாச்சியார்கோயில் போலீஸார் விசாரணை நடத்தி இன்று (18-ம் தேதி) இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.

மேலும், இந்தச் சிறுவர்களுக்கும் வேறு ஏதாவது சமூக விரோத கும்பலுக்கும் இடையே தொடர்பு உள்ளதா எனவும் கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in