

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளராகச் செயல்பட்டவருடன் வாட்ஸ் அப் தொடர்பில் இருந்த நபரது வீட்டில் என்ஐஏ (தேசியப் புலனாய்வு முகமை) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகவும் கூறி மதுரையைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி தமிழகக் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது இவ்விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்த நசீருதீன் என்பவர், முகமது இக்பாலுடன் அரபி கல்லூரியில் படித்தவர் என்பதுடன், முகமது இக்பாலின் வாட்ஸ் அப் குழுவில் அங்கம் வகித்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொச்சியிலிருந்து ஆய்வாளர் ஸ்ரீகாந்த், உதவி ஆய்வாளர் உமேஷ் பாய் உள்ளிட்டோர் அடங்கிய 4 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் வந்து தங்கினர்.
தொடர்ந்து நேற்று மாநகரக் காவல் துறையினர் உதவியுடன் நசீருதின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். நசீருதீனுடன் நடத்திய விசாரணைக்குப் பிறகு, அவரது வீட்டிலிருந்து அலைபேசி ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு மாநகரக் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், கொச்சின் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து திருப்பூர் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ''தூங்கா விழிகள் இரண்டு என்ற பெயரில் மத ரீதியாகப் பிளவு ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதற்காக மதுரை நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தற்போது என்ஐஏ விசாரித்து வருகிறது.
என்ஐஏ அதிகாரிகள் திருப்பூர் மட்டுமில்லாது, மதுரையில் 4 இடங்கள், கோவையில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகளில் லேப்டாப், ஹார்டுடிஸ்க், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள், பென் டிரைவ், அலைபேசிகள் உள்ளிட்ட 16 தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட காகிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.