

வாங்கிய கடனைத் தர மறுத்ததால் பெண்ணைக் கொன்றதாக மதுரை அருகே மைக் செட் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் கடந்த 27-ம் தேதி செம்மினிப்பட்டி மேம்பாலத்திற்கு அடியில் அணுகு சாலையோரம், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர்.
சோழவந்தான் அருகிலுள்ள சி.புதூரைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரின் மனைவி தமிழ்ச் செல்வி (31) கடந்த 23-ம் தேதி வாடிப்பட்டிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிய வந்தது. அவரது செல்போன் எண்ணைக் கைப்பற்றிய போலீஸார், அவர் யாரிடமெல்லாம் பேசினார் என்ற விவரங்களைச் சேகரித்து விசாரித்தனர்.
வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டி மைக் செட் ஊழியர் லட்சுமணன் (40) என்பவருடன் அவர் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது. லட்சுமணனிடம் நடத்திய விசாரணையில் தமிழ்ச் செல்வியை அவர் கொலை செய்தது தெரிந்தது.
அவரது வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ''தமிழ்ச் செல்வியின் கணவர் தமிழ்மணி இறந்த நிலையில், அப்பள வியாபாரம் செய்த தமிழ்ச் செல்வியுடன் லட்சுமணனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வீடு கட்ட ரூ.80 ஆயிரம் லட்சுமணன் கடன் கொடுத்துள்ளார். இத்தொகையை தமிழ்ச் செல்வி தராமல் இழுத்தடிப்பு செய்திருக்கிறார்.
ஆண்டிபட்டி பங்களா பகுதியில் கடன் தொடர்பாக இருவருக்கும் 23-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது கயிற்றால் தமிழ்ச் செல்வியின் கழுத்தை லட்சுமணன் இறுக்கிக் கொன்றார். அதைத் தொடர்ந்து பாலத்திற்கு அடியில் உடலை வீசிவிட்டுத் தப்பியுள்ளார். செல்போன் உரையாடல் மூலம் மேற்கொண்ட விவரங்கள் துப்பு துலங்கியதை அடுத்து, லட்சுமணனைக் கைது செய்தோம்'' என்று தெரிவித்தனர்.