

தாம்பரம் அருகே 17 வயது சிறுமிகூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரை கைது செய்வதில் போலீஸார் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(36), இவரது நண்பர்களான பனங்காட்டு படை கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன்(30), தாம்பரம் தொகுதியில் திமுக வலைதள பொறுப்பாளர் தனசேகரன் ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.
சுமார் 2 ஆண்டுகள் சிறுமிக்குஇந்த கொடுமை அரங்கேறியுள்ளது. இதனால் கர்ப்பமான சிறுமியை மிரட்டி கருக்கலைப்பு செய்து தொடர்ந்து தங்கள் விருப்பத்துக்கு இணங்க வைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காமல் அந்தச் சிறுமி தனது தாயிடம் கூற, விஷயம் வெளியே வந்தது. பின்னர், இது தொடர்பாக தாம்பரம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீஸார் கார்த்திக், மணிகண்டன் ஆகிய இருவரைமட்டும் கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். 2 பேர் கைதானதால், அந்தச் சிறுமிக்கு சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தனசேகரனை போலீஸார் கைது செய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். அவர் நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. போலீஸாரின் மெத்தனத்தால் இந்த வழக்கு சரியானகோணத்தில் எடுத்துச் செல்லப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலீஸார் உடனடியாக திமுகபிரமுகர் தனசேகரனை கைது செய்ய வேண்டும். புகார் கூறிய சிறுமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.