கணவனுடன் சண்டை; 2 குழந்தைகளை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற தாய்: மீட்கப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு

தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைத்த காவல் துறையினர்.
தந்தையிடம் குழந்தைகளை ஒப்படைத்த காவல் துறையினர்.
Updated on
1 min read

கணவருடன் ஏற்பட்ட சண்டையில் ஒன்றும் அறியாத தன் 2 குழந்தைகளையும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தவிக்கவிட்டு மாயமான தாயாரைத் தேடி வரும் காவல் துறையினர், நிர்கதியாய் நின்ற குழந்தைகளை மீட்டு தந்தையிடம் இன்று ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் தெரு முகப்பில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் அழுதபடி நின்றிருந்தனர். இதைக் கண்ட வியாபாரிகள் அவர்களை அழைத்து விசாரித்தபோது, ‘‘அம்மாவுடன் ரயிலில் வந்தோம். அம்மா எங்களை இங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார்’’ என அழுதபடி கூறினர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், மாயமான தாயை அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால், அவர் கிடைக்காததால் ஜோலார்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, காவலர்கள் அங்கு வந்து சிறுவன், சிறுமியைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலம் தன் தாயாருடன் வந்தது தெரியவந்தது. மற்ற விவரங்களை அந்தக் குழந்தைகளால் சரியாகச் சொல்ல முடியவில்லை. இருப்பினும் குழந்தைகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள், சென்னை ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஆவடி காவல்துறையினரைத் தொடர்புகொண்ட ஜோலார்பேட்டை காவல்துறையினர், அங்கு தாயுடன் குழந்தைகள் காணாமல் போனதாக ஏதேனும் புகார் வந்துள்ளதா என விசாரித்தனர்.

இதில், ஆவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் (28) என்பவருக்கும் அவரது மனைவி மீனாட்சிக்கும் (24) இடையே கடந்த 27-ம் தேதி ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு ரயில் ஏறிய மீனாட்சி, தன் 2 குழந்தைகளையும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் ஜோலார்பேட்டைக்கு வரவழைக்கப்பட்டு அவருக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கிய காவல் துறையினர், 2 குழந்தைகளையும் அவரிடம் இன்று ஒப்படைத்தனர். பிறகு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், ரயில் நிலையத்தில் இருந்து மாயமான மீனாட்சியைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in