

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே செயல்பட்டு வந்த போலி குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் ரூ.2 லட்சம் மதிப்பிலான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை அருகே ஞானஒளிபுரம் கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை என்பவர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கி நடத்தி வந்தார்.
அவர் முருகப்பா பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களை விநியோகித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உரிமத்தை புதுப்பிக்காமலும், ஐஎஸ்ஐ தரச்சான்று பெறாமலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை தயாரித்து வந்துள்ளார்.
மேலும் அந்த குடிநீர் பாட்டில்களில் சில பிரபல நிறுவனங்கள் பெயரில் ஸ்டிக்கர்களை ஒட்டி விநியோகித்து வந்துள்ளார்.
இதுகுறித்த புகாரையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வேல்முருகன், தியாகராஜன் உள்ளிட்டோர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை சோதனையிட்டனர்.
அப்போது குடிநீரை சுகாதாரமற்ற முறையில் குடிநீரை பிடித்து, அதில் பிரபல நிறுவனங்களின் பெயரில் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்திருந்தனர்.
இதையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஆலை உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் விசாரித்து வருகின்றனர்.