

புதுக்கோட்டையில் பெண் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 91 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர், நமணசமுத்திரத்தில் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதாரத் துறையின் ஆடிட்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இவர்களது வீட்டைப் பூட்டிவிட்டு நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஏப். 15) வீடு திரும்பிய பூரணவள்ளி, வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 91 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பூர்ணவள்ளி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகராட்சி ஆடிட்டர் வீட்டில் 91 பவுன் தங்க நகை கொள்ளைபோன சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.