Published : 14 Apr 2021 08:58 PM
Last Updated : 14 Apr 2021 08:58 PM

நிலத்தை அபகரிக்க ஆய்வாளர் உடையில் சென்று மூதாட்டியிடம் மிரட்டல்: முன்னாள் ஏட்டு உட்பட 3 பேர் கைது

சென்னை

சென்னை, அண்ணாநகரில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க ஆய்வாளர் உடையில் சென்று மிரட்டிய முன்னாள் ஏட்டு உட்பட 3 பேரை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் வசிப்பவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது வசிக்கும் வீட்டில் மேல் தளத்தில் ஸ்ரீதேவி உன்னிதனின் பிள்ளைகள் வசிக்க, கீழ்த்தளத்தில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். ஸ்ரீதேவி உன்னிதனுக்கு மேல் அயனம்பாக்கத்தில் 23 சென்ட் நிலம் உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீதேவி உன்னிதன் வீட்டில் இருந்தபோது போலீஸ் ஆய்வாளர் ஒருவரும் உடன் இரண்டு பேரும் அவரது வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறந்த அவர் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆய்வாளர் முழு போதையில் இருந்துள்ளார். ஆய்வாளர் உடையில் இருந்தவர் ஸ்ரீதேவியிடம், ''மேல் அயனம்பாக்கத்தில் உள்ள உங்கள் இடம் எனது பூர்வீகச் சொத்து, அந்த இடம் தொடர்பான ஆவணங்களை என்னிடம் காட்ட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

''நீங்கள் யார், நான் ஏன் உங்களுக்கு ஆவணங்களைக் காட்ட வேண்டும்'' என்று கேட்டுள்ளார். ''அம்மா, அவர் இன்ஸ்பெக்டர். ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்றால் காட்ட வேண்டும். போய் எடுத்து வாருங்கள்'' என்று உடன் இருந்தவர்கள் கூறியுள்ளனர். ''பெண்கள் தனியாக இருக்கும் வீட்டில் இப்படித்தான் போலீஸ் குடிபோதையில் வந்து தகராறு செய்வார்களா?'' என்று ஸ்ரீதேவி கேட்டு சத்தம் போட்டுள்ளார்.

கீழே பாட்டி யாருடனோ வாக்குவாதத்தில் ஈடுபடும் சத்தம் கேட்டு ஸ்ரீதேவியின் பேரன் சைலேஷ் கீழே வந்து என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு, ''நான் இன்ஸ்பெக்டர். இந்தம்மா சொத்துப் பத்திரத்தைப் பார்க்க வேண்டும்'' என்று ஆய்வாளர் உடையில் இருந்தவர் கூறியுள்ளார்.

முகத்தில் 2 நாள் தாடி, தொப்பி இல்லை, ஆய்வாளர் உடையில் ஆந்திர போலீஸ் உடைபோல் கையில் பேட்ஜ் (ஸ்டிக்கிங் ஃபோர்ஸ் பேட்ஜ்) வைத்து போதையில் தடுமாறியபடி நின்ற அவரை ஏற இறங்கப் பார்த்த பேரனுக்குச் சிரிப்பு வந்தது. ''உங்களைப் பார்த்தால் இன்ஸ்பெக்டர் மாதிரி தெரியவில்லையே, முகத்தில் 2 நாள் தாடி, தலையில் தொப்பி இல்லை, இப்படி பகலிலேயே குடித்துவிட்டு பாட்டியிடம் வாக்குவாதம் செய்கிறீர்கள். யூனிஃபார்மில் கையில் ஆந்திர போலீஸ் போல் பேட்ஜ் உள்ளது. தமிழ்நாடு போலீஸுக்கு இப்படி யூனிஃபார்ம் இருக்காதே? யார் நீங்கள்? உண்மையைச் சொல்லுங்கள்'' என்று கேட்டுள்ளார்.

இதனால் மிரண்டுபோன உடன் வந்த நபர்கள், 'வாப்பா போய் விடலாம்' என்று ஆய்வாளர் உடையில் இருந்தவரை அழைத்துள்ளனர். உடனடியாக பேரன் சைலேஷ், உடனிருந்த நண்பர்கள் சூழ்ந்துகொண்டு வீடியோ எடுக்கவே, உடன் வந்தவர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

அப்போதும், ''ஸ்டேஷனுக்கு வா'' என்று சைலேஷையும், அவரது நண்பர்களையும் ஆய்வாளர் உடையில் இருந்தவர் மிரட்டியுள்ளார். ''எந்த ஸ்டேஷனுக்கு வரவேண்டும்'' என்று கேட்டபோது, ''ஸ்டேஷனுக்கு வா'' என்று மீண்டும் மிரட்டிய அவரை உடன் வந்தவர்கள் இழுத்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

அவர்களைத் துரத்திச் சென்ற சைலேஷ், ஆய்வாளர் உடையில் இருந்தவரை மட்டும் மடக்கிப் பிடித்து ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தார். அந்த நபரை ரோந்துப் பணி போலீஸார் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேல் அயனம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டேவிட் ஆனந்த்ராஜ் என்பதும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.

போலீஸ் பணியிலிருந்து ஓய்வு வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. டேவிட் ஆனந்த்ராஜ் மீதும் அவரது சகோதரர்கள் மீதும் திருவேற்காடு காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மூதாட்டி ஸ்ரீதேவி உன்னிதன் அளித்த புகாரின் பேரில் போலி ஆய்வாளர் டேவிட் ஆனந்த்ராஜை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். டேவிட்டுடன் சென்று தகராறில் ஈடுபட்டு தலைமறைவான இரண்டு நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

கைதான டேவிட் ஆனந்த்ராஜ் மீது ஐபிசி 294 (பி) (அவதூறாகப் பேசுதல்) 448 (தனியார் இடத்தில் அத்துமீறி நுழைதல்), 506 (1) (கொலை மிரட்டல்), 170 (அரசு ஊழியர் போல நடித்து ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x