

பந்தலூரில் தேர்தல் மோதலில் திமுகவைச் சேர்ந்த நான்கு பேரைக் கத்தியால் குத்தியதில் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தியால் குத்திய இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் காசிலிங்கம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறார். இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், கூடலூர் தொகுதி திமுக வேட்பாளர் காசிலிங்கம் பந்தலூர் நெல்லியாளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். பிரச்சாரம் முடிந்து வேட்பாளர் காசிலிங்கம் அப்பகுதியிலிருந்து சென்ற பின்னர், அப்பகுதியில் குணா என்கிற உதயச்சந்திரன் மற்றும் அவருடைய தந்தை ரவி ஆகியோர் அங்கிருந்த மகேஸ்வரன் (27) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென மகேஸ்வரனை ரவி மற்றும் குணா என்கிற உதயச்சந்திரன் அருகில் இருந்த கத்தியால் 3 முறை குத்தியுள்ளனர். இதில் மகேஸ்வரன் படுகாயமடைந்தார். மேலும் அவர்களைத் தடுக்க முயன்ற ஆசைத்தம்பி (49), ஜெயச்சந்திரன் (18), மோகன் (29) ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மூவரும் படுகாயம் அடைந்ததால் அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகேஸ்வரனை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து குணா (என்ற) உதயச்சந்திரன் மற்றும் ரவி தலைமறைவாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வருகின்றனர்.