Published : 21 Mar 2021 08:27 PM
Last Updated : 21 Mar 2021 08:27 PM

திருட்டுக்கு முன் கூட்டாளிகள் இருவரைக் கொலை செய்த தலைவன்; கிண்டியில் கிணற்றில் கிடந்த உடல்கள்: சென்னை போலீஸாரை அதிரவைத்த கூலிப்படை 

சென்னை

சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொள்ளையடித்த கூலிப்படை கும்பல், அங்கிருந்த மருத்துவரின் காரையும் திருடிச் சென்றது. நீண்ட தேடலுக்குப் பின் சிக்கியவர்களை போலீஸார் விசாரித்தபோது இரட்டைக் கொலை செய்து உடல்களைக் கிணற்றில் வீசிச் சென்றது அம்பலமானது.

சென்னை, சைதாப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட நந்தனத்தில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 13ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் ஒரு கும்பல் திடீரென புகுந்தது. அங்கிருந்த மூத்த மருத்துவர் ராமகிருஷ்ணனை (72) கத்தி முனையில் மிரட்டிய கும்பல், பணம் பறித்தது. மருத்துவமனை செவிலியர்கள் 4 பேரை மிரட்டி 21 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போனைக் கொள்ளையடித்து மருத்துவரின் காரில் ஏறித் தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார், தனிப்படை அமைத்து திருட்டு கும்பலைத் தேடி வந்தனர். மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் கொள்ளையடித்துச் சென்றவர்கள் பழைய குற்றவாளிகளான சிவகங்கையைச் சேர்ந்த ரவிகுமார் (எ) ராக்கப்பன் (42), அவரது கூட்டாளிகள் அனகாபுத்தூர் சீனிவாசன் (45), பல்லாவரம், சங்கர் நகரைச் சேர்ந்த ரஜினி ஏழுமலை (55), மயிலாப்பூர் கறுக்கா வெங்கடேசன்(44), கோட்டூர்புரம் நெல்சன் (47), சிவகங்கை ராஜாசிங்கம் (எ) ராஜா (33) எனத் தெரியவந்தது.

அவர்கள் திருடிச் சென்ற செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், திருட்டு கும்பல் சிவகங்கையில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார், அவர்கள் 6 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கொள்ளை கும்பல் தலைவன் ராக்கப்பன் மீது ஆறு கொலை வழக்குகள் இருப்பதும், அவர்கள் கூலிப்படையாகச் செயல்படுவதும் தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் ராக்கப்பனின் கூட்டாளிகளில் ஒருவரான அண்ணாதுரை எங்கே என விசாரித்தனர். இதில் 6 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அப்போதுதான் அவர்கள் கூறிய திடுக்கிடும் சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 9-ம் தேதி கூட்டாளி அண்ணாதுரையையும், அவரது அறை நண்பரையும் கொலை செய்ததாகத ராக்கப்பனின் கூட்டாளிகள் தெரிவித்தனர்.

எதற்காக கொலை என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அண்ணாதுரை மூலம் ஒரு கொலையை நிறைவேற்ற திட்டம் போட்டு கொலை செய்துள்ளனர். அதற்கான பணம் இதுவரை வரவில்லை என்கிற ஆத்திரத்தில் கடந்த 9-ம் தேதி அண்ணாமலையைத் தேடியுள்ளனர். சூளைமேட்டில் தங்கபாண்டி என்பவர் வீட்டில் தங்கியிருந்த அண்ணாதுரையையும் உடன் இருந்த தங்கபாண்டியையும் கிண்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.

வேளச்சேரி பிரதான சாலையில் ஆளரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்ற கூலிப்படை கும்பல், பணம் தராமல் ஏமாற்றியதற்காக தனது கூட்டாளி அண்ணாதுரையைக் கொலை செய்துள்ளது. தங்கபாண்டியை என்ன செய்யலாம் எனக் கூட்டாளிகள் கேட்க, கொலையைப் பார்த்ததால் வெளியே போய் உளறிவிடுவார் என்பதால், அவரையும் கொலை செய்யுமாறு ராக்கப்பன் கூறியுள்ளார். இதனால் அந்த கும்பல் தங்கபாண்டியையும் கொலை செய்துள்ளது.

பின்னர் அங்குள்ள 40 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இருவரின் உடல்களையும் கல்லைக் கட்டிப் போட்டுவிட்டு, கிளம்பிச் சென்றுள்ளனர். 2 நாட்கள் சுற்றித் திரிந்துவிட்டு நந்தனம் மருத்துவமனையில் கொள்ளையடித்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை அறிந்த போலீஸார், கூலிப்படை கும்பலை அழைத்துக்கொண்டு வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டச் சொல்லியுள்ளனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் மூலம் கயிறு கட்டி உடல்கள் மேலே கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

கொலை மற்றும் திருட்டுக் குற்றத்திற்காக ஆறு பேரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சாதாரணத் திருட்டு வழக்கை விசாரிக்க, பூதாகரமாக இரட்டைக் கொலை விவகாரம் வெளிவந்தது சென்னை போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x