

சேலத்தில் சொத்துத் தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சந்தோஷை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
சேலம் அருகே உள்ள வீடுகாத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (43). இவர் வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஆவார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். செல்வத்தின் சகோதரர் சந்தோஷ். இவர் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் தெற்கு தெருவில் தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.
இந்த வீட்டை விற்பனை செய்ய செல்வம் முயன்றார். இதற்கு தம்பி சந்தோஷ் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது சம்பந்தமாக, இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று (மார்ச் 17) காலை செல்வம், பெரியபுத்தூர் தெற்கு தெருவில் உள்ள அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் செல்வம் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ் ஜன்னல் வழியாக நாட்டுத் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்று தப்பி ஓடினார்.
இதுகுறித்து, கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சந்தோஷை போலீஸார் தேடி வருகின்றனர்.