

கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக் கூறி மயக்க ஊசி செலுத்தி கடலூரில் உறவினரிடமே நகைகளைத் திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி ராசாத்தி. இவரது அத்தை மகளான பெரம்பலூர் மாவட்டம் கீழகுடிகாட்டைச் சேர்ந்த சத்யபிரியா(31) என்பவர் லக்கூரிலுள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினரிடம் அவர்களுக்குக் கரோனா தடுப்பு ஊசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்திக் கொண்டால் கரோனா வராது எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் ஊசி போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் சத்யபிரியா மயக்க ஊசி செலுத்தியுள்ளார். ஊசி போட்ட பின் நால்வரும் மயங்கியதை அடுத்து சத்யபிரியா, கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராசாத்தி கழுத்தில் இருந்த 6 சவரன் தாலிச் செயின், மூத்த மகள் கிருத்திகா கழுத்திலிருந்த 10 சவரன் தாலிச் செயின்,1 சவரன் செயின், மற்றொரு மகளான மோனிகா அணிந்திருந்த 2 சவரன் செயின் மொத்தம் 19 சவரன் நகைகளை கழட்டிக் கொண்டு நள்ளிரவிலேயே சத்யபிரியா அங்கிருந்து தப்பியுள்ளார்.
மயக்கம் தெளிந்து நேற்று காலையில் எழுந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர், கழுத்தில் அணிந்திருந்த நகைகளை இல்லாததை அறிந்து, ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய ராமநத்தம் போலீஸார், நகைகளோடு தலைமறைவான சத்தியப்ரியாவைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருடியதை ஒப்புக் கொண்ட சத்யபிரியா திருடிய நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் வழக்குப் பதிவு செய்து சத்யபிரியா சிறைக்கு அனுப்பப்பட்டார்.