

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே சொத்து விவகாரத்தில் தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66). இவர் மனைவி சின்னராஜி (60). இந்தத் தம்பதியருக்கு ராமசாமி (40) என்ற மகனும் சுமதி (35) என்ற மகளும் உள்ளனர். மணமாகி குடும்பத்துடன் வசிக்கும் ராமசாமி சொந்த கிராமத்திலேயே இருசக்கர வாகன மெக்கானிக் கடையை நடத்தி வருகிறார். சுமதிக்கும் திருமணமாகிவிட்டது. அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சின்னராஜியின் பெயரில் இண்டூர் அடுத்த பி.அக்ரஹாரம் பகுதியில் வீட்டு மனை ஒன்று இருந்தது. இதை இரண்டு பாகமாகப் பிரித்து மகனுக்குப் பாதி நிலத்தையும் , மகளுக்குப் பாதி நிலத்தையும் ராமச்சந்திரன் தம்பதியினர் வழங்கினர். சுமதிக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அவர் கடைகளுக்கான கட்டிடம் கட்டி வந்தார். ராமசாமி தனக்கு வழங்கப்பட்ட நிலத்தில் கடைகள் கட்ட விரும்பி, அதற்காகப் பண உதவி செய்யுமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக ராமசாமிக்கும் பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று (5.3.2021) இரவும் இந்த விவகாரம் தொடர்பாக ராமசாமிக்கும் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமசாமி அருகில் இருந்த இரும்பு ராடு மூலம் தாய் சின்னராஜியின் தலைப்பகுதியில் தாக்கியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் மகனைத் தடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் ராமசாமி இரும்பு ராடால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் இருவருக்கும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடியச் சரிந்தனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் வரும் முன்பாகவே இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்த இண்டூர் போலீஸார், கொலையான இருவரது உடலையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரைத் தாக்கிக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த ராமசாமி நள்ளிரவில் இண்டூர் போலீஸில் சரண் அடைந்தார். அவரைக் கைது செய்த போலீஸார் சிறைக்கு அனுப்பினர்.
சொத்து விவகாரம் தொடர்பாக பெற்றோரை மகனே தாக்கிக் கொலை செய்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.