உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்: மகளின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்த தந்தை

உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்: மகளின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்த தந்தை
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மகளின் காதல் உறவை ஏற்றுக்கொள்ளாத தந்தை அவரின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்துக்குக் கையில் கொண்டு வந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் பண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவரது 17 வயது மகள், ஓர் இளைஞரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த காதல் உறவால் அதிருப்தியடைந்த சர்வேஷ் மகளிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையி, நேற்று காலை தனது மகளின் துண்டிக்கப்பட்ட தலையுடன் அவர் சாலையில் வலம் வந்தார்.

அது குறித்து உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க உடனடியாக அங்கு போலீஸார் குவிந்தனர். ஆனால், சர்வேஷ் குமார், காவல்துறையினரைப் பார்த்து எவ்வித சலனமும் கொள்ளவில்லை.

அவரது செய்கையை போலீஸார் வீடியோ பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, என் மகளின் உறவு பிடிக்காமல் நானே இதனை செய்தேன். துணைக்கு ஆளில்லை ஆகையால், கதவை சாத்திக்கொண்டு நான் ஒரு கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தலையைத் துண்டித்துவிட்டேன் என்றார். அவரது செய்கை காவல்துறையினரையே அதிர்ச்சிக் கொள்ளும் வகையில் இருந்தது. சர்வேஷ் குமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

வன்கொடுமையில் உ.பி. முதலிடம்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2019ல் நாட்டிலேயே அதிகபட்சமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் அதிகபட்சமான வழக்குகளும் உத்தரப் பிரதேசத்திலேயே பதிவாகியுள்ளன. உ.பி.யில் 7,444 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 6,402 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 6,053 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in