சேலம் மத்திய சிறையில் கைதி தற்கொலை: குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சேலம் மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் செண்பகமாதேவி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் (36). இவர் நண்பருடன் சேர்ந்து 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கடந்த ஆண்டு மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் இன்று (பிப். 23) அதிகாலை வார்டன்கள் ஆய்வு செய்தபோது, 8-ம் எண் பிளாக்கில் அசோக்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக, சிறைத்துறை அதிகாரிகள் அசோக்குமார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்கு விசாரணை விரைந்து நடைபெற்று வரும் நிலையில், தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக எண்ணி அசோக்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வேறு காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in