Published : 22 Feb 2021 05:20 PM
Last Updated : 22 Feb 2021 05:20 PM

'சதுரங்க வேட்டை' பாணியில் மோசடி; சினிமா புகைப்படக் கலைஞரைக் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

சென்னை

ரைஸ் புல்லிங் கலசம் விற்பனை செய்து கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி மோசடி செய்த புகைப்படக் கலைஞரை 6 பேர் கொண்ட கும்பல் திரைப்படப் பாணியில் கடத்தியது. சென்னை போலீஸார் அவர்களை அதே பாணியில் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன் (34). இவர் சினிமா புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். ஆயிரம் விளக்கு பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். கரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் சரியாகத் தொழில் நடக்காததால் போட்டோ ஸ்டுடியோவை மூடிவிட்டார்.

பின்னர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். புராதானப் பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காக திருமுல்லைவாயல் பகுதியில் ஒரு அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் நியூட்டனுக்கு பெங்களூரைச் சேர்ந்த மேத்யூ என்பவர் பழக்கமானார். குறுகிய காலத்தில் பணம் சேர்க்க வேண்டும் என்கிற நியூட்டனின் ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல திட்டம் ஒன்று உள்ளது என மேத்யூ ஆசை காட்டியுள்ளார்.

ரைஸ் புல்லிங் பற்றி என்னதான் விழிப்புணர்வு இருந்தாலும் மக்களுக்குப் பேராசை இருக்கும் வரை ஏமாறத்தான் செய்வார்கள். நமக்கும் அதுதான் மூலதனம் என மேத்யூ கூறியுள்ளார். சிறிய பித்தளைக் குடங்களில் சில நகாசு வேலைகளைச் செய்தால் ரைஸ் புல்லிங் எந்திரம் போல் மாற்றிப் பலரிடமும் விற்று கோடிக்கணக்கில் காசு பார்க்கலாம் என்று மேத்யூ கூறியுள்ளார். நான் ரைஸ் புல்லிங் எந்திரம்போல் வடிவமைத்து செய்து தருகிறேன், நீங்கள் வாடிக்கையாளரைக் கூட்டிட்டு வாங்க என்று கூறியுள்ளார்.

கோடிக்கணக்கில் எளிதாகப் பணம் பார்க்கும் ஆசையில் நியூட்டன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றும் பலரிடமும் பெரிதாக ரைஸ் புல்லிங் எந்திரம் பற்றிச் சொல்லி ஆசையைத் தூண்டியுள்ளார். எந்திரம் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும், நீங்களும் வாங்கி மற்றவர்களுக்கு விற்கலாம் எனக் கூறி லட்சத்தில் வாங்கினால் கோடியில் புரளலாம் என ரைஸ் புல்லிங் கலசம் பற்றிக் கூறி, சுமார் 21 பேரிடம் 57 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.

ஆனால், சொன்னபடி பணத்தைப் பெற்ற நியூட்டனும், மேத்யூவும் ரைஸ் புல்லிங் எந்திரத்தைத் தராததால் பணம் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். அவரவர் பாணியில் கோபமாக, நயமாக, மிரட்டலாக, கெஞ்சலாகக் கேட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் நியூட்டன் சால்ஜாப்பு சொல்லி வந்துள்ளார். இதற்கிடையே மேத்யூ பணத்துடன் தலைமறைவானார். இதனால் பணம் கொடுத்தவர்கள் நியூட்டனிடம் பணம் கேட்டு வந்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட விக்கி, சதீஷ், திலீப், கவுதம், சுனில் ஆகிய 5 பேர் நியூட்டனிடமும், மேத்யூவிடமும் ரூ.37 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து நியூட்டனை அவர்கள் மிரட்ட, தனது திருமுல்லைவாயல் அலுவலகத்துக்கு வந்தால் மேத்யூவை வரவழைத்துப் பணத்தை வாங்கித் தருவதாக நியூட்டன் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை (பிப்.19) மேத்யூ சென்னை வந்து, நியூட்டன் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.

5 பேரும் திருமுல்லைவாயல் அலுவலகத்தில் நியூட்டன், மேத்யூ இருவரையும் சந்தித்துள்ளனர். பணம் கேட்க அதற்கு மேத்யூ சால்ஜாப்பு சொல்ல, வாக்குவாதம் முற்றி பெரிதாகவே மேத்யூ நைசாக நழுவிவிட 5 பேரும், நியூட்டனையும் அவரது நண்பர் ராகுஜியையும் பிடித்துக் கொண்டனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு பல இடங்களில் சுற்றியுள்ளனர்.

நியூட்டனை மிரட்டி அவரது மாமனாரிடம் பணம் வாங்கித் தரும்படி கூறியுள்ளனர். இதற்கிடையே 19-ம் தேதி காணாமல் போன தனது கணவரை மீட்டுத்தரும்படி நியூட்டனின் மனைவி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக அசோக் நகர் போலீஸார் நியூட்டனைத் தேடிப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.

இதற்கிடையே மறுநாள் (பிப்.20) நியூட்டன் தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தியுள்ளார்கள் என்றும், ரூ.30 லட்சம் பணம் கொடுத்து தன்னை மீட்கும்படி கேட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பயந்துபோன நியூட்டனின் குடும்பத்தார் போலீஸாரிடம் முறையிட, கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீஸார் திட்டம் போட்டனர்.

அதன்படி கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுப்பதுபோல் மாமனாரைப் பேச வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர். பேசியபடி பணத்தைக் கொடுப்பதாக நியூட்டனின் மாமனார் ஒப்புக்கொள்ள, குறிப்பிட்ட இடத்துக்கு பணத்துடன் வரும்படி கடத்தியவர்கள் கூறியுள்ளனர். பணத்துடன் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போக திரைப்படப் பாணியில் வேறு வேறு இடங்களைக் கூறி அலைக்கழித்துள்ளனர்.

இறுதியாக பட்டாபிராம் அருகே பணத்தைப் பெற கடத்தல் நபர்களில் கௌதம் மற்றும் சுனில் ஒரு பைக்கில் வர போலீஸார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயல, அதில் கௌதம் சிக்கிக்கொண்டார். சுனில் தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் சென்ற சினில் மீண்டும் நியூட்டனின் மாமனாரை அழைத்து போலீஸாருக்குத் தகவல் தெரிந்ததால் நியூட்டனைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சுனிலுக்கு ஷாக் கொடுக்கத் தீர்மானித்த போலீஸார் சுனில் குடும்பத்தை தங்கள் கஸ்டடிக்கு கொண்டுவந்து போன் போட்டு சுனிலுக்குப் பேச வைத்துள்ளனர். போலீஸாரின் நடவடிக்கையால் பயந்துபோன சுனில், சார் நான் திருப்பதியில் இருக்கிறேன் உடனடியாக சென்னைக்கு வந்து சரணடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதே நேரம் கடத்தியவர்களின் செல்போன் எண்களை டிராக் செய்துகொண்டே இருந்த போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தல்காரர்கள் வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர்.

காரில் இருந்த நியூட்டன் அவரது நண்பர் ராகுஜி ஆகியோரை மீட்டனர். காரில் இருந்த விக்கி, சதீஷ், சுனில் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் பூந்தமல்லி பகுதியில் பணத்தை எதிர்பார்த்து நின்றிருந்த திலீப்பையும் கைது செய்தனர். அனைவரையும் ஸ்டேஷன் அழைத்து வந்த போலீஸார் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே நியூட்டனையும், தலைமறைவான மேத்யூவையும் பிடித்தபின் அவர்கள் பலரையும் ஏமாற்றிப் பணம் பறித்த குற்றத்திற்காக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் தனியாகப் புகாரைப் பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

காலம் கணினி மயமானாலும், கையடக்க செல்போனில் 'சதுரங்க வேட்டை' படத்தை யூடியூபில் பார்க்கும் வசதியிருந்தும் பணக்காரனாகும் மோகம் சாதாரண மக்கள் முதல் சகலரையும் பிடித்து வாட்டுவதால் போலீஸார் என்ன எச்சரித்தாலும் மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழுந்து பணத்தை இழப்பவர்கள் கதை தொடர்கதையாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x