

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆலங்காடு பகுதியில் ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டையை சேர்ந்த அமமுக பிரமுகர் கோவிலூர் ஜெகன் என்பவரது அண்ணன் மதன் என்பவரைப் படுகொலை செய்த வழக்கில் இவர் முதல் குற்றவாளி ஆவார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இது தொடர்பான வழக்கு தற்போது திருவாரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை 7 மணி அளவில் முத்துப்பேட்டைக்கு வந்த ராஜேஷ், ஆலங்காட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்காடு அண்ணா சிலை அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த சிலர் ராஜேஷை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர். அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு மூன்று பேரும் தப்பி ஓடினர். பின்னர் முத்துப்பேட்டை ஆசாத் நகர் என்ற இடத்தில் தலையைப் போட்டு விட்டு தப்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் தலையையும், உடலையும் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, திருவாரூர் எஸ்பி துரை ஆகியோர் நேரில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கொலைச்சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த ராஜேஷுக்கு பேபி (32) என்ற மனைவியும் 7 மாத ஆண்குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பதற்ற சூழல்
இதனிடையே கொலை சம்பவத்துக்குப் பிறகு ஆலங்காடு பைபாஸ் சாலை வள்ளுவர் சிலை அருகே அரசுப் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர் இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.