

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் நாளில் கன்னித் திருவிழா தொடங்கும். 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொள்வது வழக்கம்.
அந்த வகையில் காணும் பொங்கலன்று தொடங்கிய கன்னித் திருவிழாவின் 11-ம் நாள் விழா இன்று நடைபெற்றது. கன்னித் திருவிழா என்பது, பூப்படையாத இளம்பெண்களுக்காக கிராமங்களில் நடத்தப்படும் விழா. இந்த விழாவில் சிறுமிகளே பெரும்பாலும் பங்கேற்பர். பூப்படையும் வரை பங்கேற்கும் சிறுமிகள் பூப்படைந்த நிலையில், விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்து விடுவர். அந்த வகையில் சித்தேரியில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பூஜையில் பங்கேற்ற 7 இளம்பெண்களை நீரில் விடும் சம்பிரதாயம் வழக்கத்திற்காக அழைத்துச் சென்றனர்.
அரசடிக்குப்பம் சித்தேரியில் 7 இளம்பெண்கள் ஏரியில் இறங்கிய நிலையில், அந்த நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காக வேகாக்கொல்லை மதுரா ஏ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபூபதி என்பவரின் மகள்கள் நந்தினி (18), வினோதினி (16), பாலமுருகன் என்பவரது மகள் புவனேஸ்வரி (19) ஆகிய மூன்று பேரும் சென்றனர். நிகழ்வு முடிந்த நிலையில், மூன்று பேரும் நீரில் இறங்கி குளிக்க முயன்றபோது, அவர்களும் மூழ்கினர்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று பேரும் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.