

பெண்களை ஏமாற்றிப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் நாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி (27) பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி, காதலிப்பது போல் ஏமாற்றி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுப் பணம் பறித்து வந்தது தொடர்பாகப் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பெண்கள் அளித்த 6 பாலியல் புகார்கள், கந்துவட்டிப் புகார் என காசி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் ஏற்கெனவே கந்துவட்டி, ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும் 5 வழக்குகளின் ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டி வந்தனர்.
இந்நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பெண் ஊழியரை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்த வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று காசி மீது 3-வது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.