

தஞ்சாவூர் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தனியார் பேருந்தில் மின்கம்பி உரசியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மன்னார்குடி - தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட இப்பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
மதியம் வரகூர் வந்த இப்பேருந்து இடது புறமாகச் சென்றதில் சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது. அப்போது, சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி மீது பேருந்தின் மேற்கூரை உரசியது. இதனால், பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணம் செய்த நடராஜன், மாரியப்பன், கல்யாணராமன் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர்.
அதேபோல காயம் அடைந்த 7 பேர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னால் வந்த வாகனத்துக்கு வழி விடும்போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட இடத்துக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள விரைந்துள்ளனர்.