

மதுரை டாஸ்மாக் ஊழியரிடம் மாமூல் வசூலிக்க முயன்ற பார் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் ரவி (45). இவர் சோலையழகு புரம் மெயின்ரோட்டிலுள்ள டாஸ்மாக கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.
அவர் பணியில் இருந்தபோது, வில்லாபுரம் டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் ரவி (44) உள்ளிட்ட 4 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் மேற்பார்வையாளர் ரவியிடம் செலவுக்கென மாமூல் பணம் கேட்டுள்ளனர்.
அவர் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி, ரவியை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பார் உரிமையாளர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் யோகேஷ்(20), தினேஷ்குமார் (23) ஆகியோரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடுகின்றனர்.