

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கணவர் உதவியுடன் திருடிய பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வள்ளியூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் காணாமல் போவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணனிடம் புகார்கள் வந்தது.
இந்த வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் 2-ம் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிரேசியா (29) என்பவர் பாரா அலுவலில் இருக்கும்போது இரவு நேரங்களில் தனது கணவர் அன்புமணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, காவல் நிலையத்துக்கு வரவழைத்து அவரது உதவியுடன் மோட்டார் சைக்கிள்களை திருடுவது தெரியவந்தது.
இதையடுத்து கிரேசியாவையும், அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், போலீஸ் நிலையத்தில் இருக்கும் செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.