கோவை மதுக்கரை அருகே அதிகாலையில் ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் பணம், கார் கொள்ளை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவை அருகே அதிகாலையில் ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் பணம், காரை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). கோவையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கோவையில் இருந்து இன்று (டிச. 25) அதிகாலை 4.30 மணிக்கு கேரளாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது ஓட்டுநர் சம்சுதீன் (42) ஓட்டிச் சென்றுள்ளார்.

கோவை மதுக்கரையை அடுத்த நவக்கரை நந்தி கோயில் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு காரில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களது காரை வழிமறித்துள்ளது. பின்னர், கத்தியை காட்டி மிரட்டி, அப்துல் சலாமிடம் இருந்த ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, காரையும் கடத்திச் சென்றுவிட்டனர்.

இது குறித்து, மதுக்கரை காவல்நிலையத்தில் அப்துல்சலாம் புகார் அளித்தார். காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள கார்களின் எண்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க மதுக்கரை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in