

நெல்லை ஆவின் நிறுவன பொது மேலாளர் பி.எம் கணேசன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வட கரும்பாலையூரைச் சார்ந்தவர் முருகையன். இவர், ஆவின் நிறுவனம் மூலம் தனக்கு வரவேண்டிய ரூபாய் ஒரு லட்சத்து 81 ஆயிரம் நிலுவைத் தொகையை பெற முயற்சித்து வந்தார்.
ஆனால், அந்தத் தொகையைப் பெற 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து முருகையன் அளித்தப் புகாரின் பேரில் நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மேக்லரின் எஸ்கால் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபின் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கணேசனைக் கைது செய்தனர்.
நெல்லை ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளராக கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் கணேசன் என்ற கணேசா திருவண்ணாமலையிலிருந்து மாறுதலாகி நெல்லை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.