

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம்.
இன்று (டிச.13) ஞாயிறு என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் சக்திவேல் ஆகியோரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்ய சோளிங்கருக்கு நேற்றிரவு வந்தார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயில் சின்னமலை பாண்டவர் தீர்த்த குளத்தில் குளிக்க ஜெயராமன் மற்றும் சக்திவேல் குடும்பத்தார் சென்றனர். அப்போது, ஜெயராமன் மகன் ஜெகன்(18), சக்திவேல் மகள் அபிநயா(15) ஆகியோர் குளத்தில் இறங்கி குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.
இதைக் கண்டதும், உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனே, பொதுமக்கள் குளத்தில் இறங்கி அவர்களைத் தேடினர். அப்போது, ஜெகன் மற்றும் அபிநயா ஆகியோர் குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டனர்.
இதுகுறித்துத் தகவலறிந்தும் கொண்டபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.