சிவகங்கையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு பெற்றோர் சென்றுவிட எதிர்பாராமல் விபத்தில் இறந்த 4 வயது குழந்தை: நிவாரணம் கோரி முறையீடு

சிவகங்கையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு பெற்றோர் சென்றுவிட எதிர்பாராமல் விபத்தில் இறந்த 4 வயது குழந்தை: நிவாரணம் கோரி முறையீடு
Updated on
1 min read

சிவகங்கையில் முதல்வர் நிகழ்ச்சிக்குச் சென்ற அதிமுக கடைநிலை தொண்டரின் குழந்தை விபத்தில் இறந்த நிலையில் அரசிடம் நிவாரணம் கோரி நிற்கின்றனர் ஏழைப் பெற்றோர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள சங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷணன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு தர்ஷன் என்ற 4 வயது மகன் இருந்தார். 2 வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது.

அதிமுகவின் ஏழை தொண்டரான ராமகிருஷ்ணன், அவரது மனைவியும் கடந்த 4-ம் தேதி கைக் குழந்தை யை மட்டும் தூக்கிக்கொண்டு, தர்ஷனை வீட்டில்விட்டு விட்டு சிவகங்கையில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

தாத்தாவுடன் இருந்த தர்ஷன் தாயைத் தேடி சங்கமங் கலம் ரோட்டு பகுதிக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதி சிறுவன் உயிரிழந்தான்.

இது பற்றி மானாமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மானாமதுரை எம்எல்ஏ நாகராஜ், ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார்.

இருப்பினும், குழந்தையை இழந்து தவிக்கும் ராமகிருஷணன் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதி கேட்டு எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுக்கப் பட்ட நிலையில் அவருக்கு உதவி கிடைக்க, அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அதிமுக செயலர் செந்தில்நாதன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அக்குடும்பத்தினர் மற்றும் அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in