இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்: திறந்து கிடந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த தாய்-மகள் பலி

இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்: திறந்து கிடந்த மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த தாய்-மகள் பலி
Updated on
2 min read

சென்னை தாம்பரம்-பைபாஸ் சாலையில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவப் பேராசிரியையின் வாகனம் சாலையில் சறுக்கி விழுந்ததில், மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்த தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் பிரிசில்லா (45). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் இவாலின் (22). கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை தனது மகளுடன் கரோலின் தனது இருசக்கர வாகனத்தில் கரோலின் சென்றுள்ளார். ஷாப்பிங் முடிந்து இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையால் சாலையோரம் மழைநீர் வடிகாலில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் மதுரவாயல் புறவழிச் சாலைக்கும், இணைப்புச் சாலைக்கும் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 10 அடி ஆழம், 3 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது.

அது முறையான பராமரிப்பின்றி, 3 அடி ஆழத்திற்குச் சேறும், சகதியும் நிரம்பி கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. சாலையை ஒட்டி இடது பக்கம் திறந்த நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சாலைக்குச் சமமாக மூடியில்லாமல் திறந்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு இந்த வடிகால் சாலையோரம் தொடர்ந்து வரும்.

அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் தாய், மகள் இருவரும் விழுந்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். சாலையில் இருசக்கர வாகனம் மட்டும் அனாதையாகக் கிடக்க, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் நிறுத்திப் பார்த்தபோது காயத்துடன் கால்வாயில் பிணமாகத் தாய், மகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சாலையின் ஓரம் சாலைக்குச் சமமாக 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூடியில்லாத வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ஒன்று. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புகார் அளித்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் சர்வீஸ் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகளும் இருட்டில் சாலையோர விளக்கும் இல்லாத நிலையில் எதிரில் வந்த வாகன வெளிச்சத்தில் இடது புறமாக ஒதுங்கியதால் சாலையோரம் தேங்கியிருந்த சகதியில் வாகனம் வழுக்கி இருவரும் திறந்து கிடந்த கால்வாய்க்குள் விழுந்து காயம்பட்டு மயங்கியிருக்கலாம். கால்வாய்க்குள் மழைநீர், சாக்கடை நீர் இரண்டும் கலந்து இருந்த நிலையில் அதில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சாலையின் மட்டத்திற்கே வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்குச் சரிவரத் தெரிவதில்லை. ஆங்காங்கே புற்களும் மண்டிக் கிடக்கின்றன. மேலும், மொத்தமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வடிகால் வாய்க்கால் மூடப்படாமல், நீண்டகாலமாகத் திறந்த நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு உயிர்கள் பலியான பின்னராவது இதற்குத் தீர்வு வருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in