

மருந்து கட்டு, ஜீன்ஸ் உடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.14.73 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஞாயிறன்று துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 1644 என்னும் விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 27 வயதான அஹமத் அனாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அவரை சோதனையிட்டதில் அவரது உடலில் மருந்து கட்டு போடப்பட்டு இருப்பதையும், சந்தேகத்தின் பெயரில் அதனை சோதனையிட்டதில் அதனுள் 168 கிராம் எடையில் இரண்டு தங்கப் பசை பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இடமிருந்து ரூ. 7.5 லட்சம் மதிப்பில் 147 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று துபாயிலிருந்து ஏர் இந்தியா ஏஐ 906 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 48 வயதான ஜும்மா கான் மற்றும் 46 வயதான முகமது ரஃபி ஆகியோரை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர். அவர்களை சோதனையிட்டதில், அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் உடையின் உள்ளே 176 கிராம் எடையுள்ள 4 தங்க பொட்டலங்கள் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 7.23 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரு சம்பவங்களில் இருந்தும் மொத்தம் 289 கிராம் எடையில் ரூ. 14.73 லட்சம் மதிப்பிலான தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.