

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்துவிழிப்புடன் இருக்குமாறு சைபர்கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய புதுப்புது செயலிகள் வந்துள்ளன. இந்த செயலிகள் மூலம் வாங்கும் பொருட்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், பணத்தை திரும்ப அனுப்பக் கோரி வாடிக்கையாளர்கள் புகார் செய்வது வழக்கம். இப்படி புகார் செய்யும் பட்சத்தில், ஒரு சில நாட்களில் பணம் அவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்துவிடும். ஒரு சிலருக்கு பணம் திரும்ப கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும்போது, குறிப்பிட்ட செயலியின் சேவைப்பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
இவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய வாடிக்கையாளர்கள், அதுகுறித்து பதிவிடுவதற்காக பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அதில் லட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவிட்டுள்ளனர். இவ்வாறு குறைகளை பதிவிடுபவர்கள் தங்களது செல்போன் எண்களையும் பதிவிடுகின்றனர். இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மோசடி கும்பலை சேர்ந்த சிலர், இதுபோன்ற இணையதளங்களில் பதிவிடுபவர்களின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு, அவர்கள் பரிவர்த்தனை செய்த ஆன்லைன் நிறுவனத்தின் சேவைப்பிரிவில் இருந்து பேசுவதாக கூறி, “பணத்தை திரும்ப அனுப்புவதற்காக உங்களது டெபிட் அல்லதுகிரெடிட் கார்டு விவரங்களை சொல்லுங்கள்” என்று கேட்கின்றனர். அல்லது ஒரு லிங்க்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடும்படி கூறுகின்றனர். கார்டு விவரங்கள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்து பணத்தைகொள்ளையடித்து விடுகின்றனர்.
இதுபோன்ற புகார்கள் தற்போது நிறைய வரத் தொடங்கியுள்ளன. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.