

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஆளை மாற்றி வேறு இளைஞரைக் கொன்ற நபர்கள் கோவையில் போலீஸாரிடம் சரண் அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரியநாதபுரத்தை அடுத்த ஆப்பனூரைச் சேர்ந்த முருகநாதன் (40), கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கும் இடையே தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற சண்முகவேல் (40), கூலித்தொழிலாளி. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள மாரந்தை மேல குடியிருப்பு ஆகும். சண்முகமும், முருகநாதனும் நண்பர்கள்.
சில நாட்களுக்கு முன்னர் ஊருக்குச் சென்ற சண்முகம், கடந்த 21-ம் தேதி நண்பர் முருகநாதனைச் சந்தித்து அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து, மது அருந்திவிட்டு, பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞரைப் பார்த்த முருகநாதன், மதுபோதையில் தனது எதிரி வேலுச்சாமி வருவதாக நினைத்து, நண்பர் சண்முகத்திடம் தெரிவித்து, அவரைக் கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பின்னர், இருவரும் சேர்ந்து அந்த இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்றனர். மதுபோதை தெளிந்தவுடன், தாங்கள் வேலுச்சாமி என நினைத்து, ஆள் மாறி வேறு இளைஞரைக் கொலை செய்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து முருகநாதன், சண்முகம் ஆகியோர் அன்றைய தினமே, கோவைக்குத் தப்பி வந்தனர்.
சாயிபாபா காலனியில் உள்ள அவர்களது நண்பர் தர்மா் (48) என்பவரது வீட்டில் தலைமறைவாக இருந்தனர். தர்மரின் சொந்த ஊரும் கடலாடி அருகேயுள்ள மாரந்தை மேல குடியிருப்பு ஆகும். இதற்கிடையே கொலை தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் துறைமுகம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட இளைஞர் மனோஜ் (24) என்பதும், மீனவரான அவர், கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிந்து துறைமுகம் போலீஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து விவரங்களை அறிந்த, கோவையில் பதுங்கியிருந்த முருகநாதன், சண்முகம் ஆகியோர் போலீஸார் தங்களைப் பிடித்துவிடுவர் என்று எண்ணி, சாயிபாபா காலனி போலீஸாரிடம் இன்று (30-ம் தேதி) சரணடைந்தனர். அதேபோல், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தருமரும் சரண் அடைந்தார்.
கோவை போலீஸார், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் துறைமுகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். துறைமுகம் போலீஸார், இன்று கோவைக்கு வந்து சரணடைந்த மூவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.