

சென்னையைச் சேர்ந்தவர் ஹாஜிமுகமது. திருச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையலராக வேலை செய்து வரும் இவர், கடந்த 6 மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த வேலூர் அருகே பூங்கா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி அமீனாபேகம்(26). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ள நிலையில், நவ.2-ம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், 4-வதாக பிறந்த பெண் குழந்தையை கடந்த ஒருவாரமாக காணவில்லை என்றும், அந்த குழந்தை விற்கப்பட்டுவிட்டதாகவும் புதுக்கோட்டை 'சைல்டு லைன்' அமைப்புக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், பூங்கா நகரைச் சேர்ந்த ஆர்.கண்ணன்(45) என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு, குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விலை பேசி அவிநாசி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம் நவ.12-ம் தேதி விற்றது தெரியவந்தது. விராலிமலை போலீஸார், கண்ணன் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவிநாசியில் ஒரு தம்பதியிடம் விற்கப்பட்ட பெண் குழந்தையையும் மீட்டனர்.