செல்ல நாய் உயிரிழந்த வேதனை: அடக்கம் செய்வதற்குள்ளாகவே முதுகலை மாணவி தற்கொலை  

சித்தரிப்புப்பு படம்.
சித்தரிப்புப்பு படம்.
Updated on
1 min read

உயிரிழந்த தனது செல்ல நாயை அடக்கம் செய்வதற்குள்ளாகவே, முதுகலை பயிலும் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து கோத்ரா சாலை காவல் நிலைய அதிகாரி சாமன் சின்ஹா ​​கூறியதாவது.

''கோர்கா வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டின் கூரையில் இரும்புக் குழாயில் தொங்கிய நிலையில் 21 வயது மாணவி பிரியான்ஷு சிங் கண்டெடுக்கப்பட்டார்.

முதுகலை பயின்று வந்த அவர் மிகவும் பிரியத்தோடு ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இறந்தது.

நோயிலிருந்து தனது செல்ல நாய் குணமாகிவிடும் என்று பிரியான்ஷு நம்பியிருந்தார். செல்ல நாயின் எதிர்பாராத மரணம் அவரை நிலைகுலையச் செய்தது. அன்று முழுவதும் யாரிடமும் பேசாமலும் சாப்பிடாமலும் மிகுந்த வேதனையில் பிரியான்ஷு இருந்தார்.

இறந்த நாய் மறுநாள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அந்தப் பெண் தனது வீட்டின் கூரையில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டார்''.

இவ்வாறு கோத்ரா சாலை காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

செல்ல நாயின் மரணத்திற்காக முதுகலை படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்லப் பிராணிகள் மீது பாசம் வைக்க வேண்டியதுதான். ஆனால், அது எல்லைமீறிப் போனால் நமது உயிரையே பணயம் வைக்கும் நிலையும் ஏற்படும். எதன் மீதும் எல்லை மீறிப் பாசம் வைக்கக்கூடாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in