திருப்பூர் அருகே கார், டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே கார், டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காரும், டீசல் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருடைய கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களது குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் பல்லடம் பகுதியில்உள்ள தங்களது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஒரே காரில் சென்றுள்ளனர். பின்னர், நேற்று மாலை மீண்டும் பல்லடத்தில் இருந்து சேலம் சாமிநாதபுரத்துக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஊத்துக்குளி அருகே காக்காபள்ளம் என்ற இடத்தில் சென்ற போது, காரும், எதிரே வந்த டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்தது. காரில் பயணம் செய்த ஹேமாவை தவிர,மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள், போலீஸாருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த ஹேமா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி, தலைமறைவான டேங்கர் லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர்.

திருப்பூர் அருகே கார், டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
இடைத்தேர்தல் ‘சவால்’ முதல் ‘வேட்டைக்காரன்’ பாடல் வரை: முதல்வர் விஜய்யின் கரூர் உரை ஹைலைட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in