

கோவை: கோவையில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை உக்கடம்-பேரூர் புறவழிச்சாலையில், தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் உள்ளது. நேற்று முன்தினம் இங்குள்ள மதுக்கூடத்துக்கு வந்த சில இளைஞர்கள் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபாட்டில்களை வாங்கினர். அந்த நோட்டின் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் அதை பரிசோதித்து பார்த்தபோது, கள்ள நோட்டு எனத் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லாதவாறு ஊழியர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, கடைவீதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கோவை கரும்புக்கடையைச் சேர்ந்த அக்தர் பர்வேஷ்(21), கரும்புக்கடையைச் சேர்ந்த ஆபில்(20), செல்வபுரத்தைச் சேர்ந்த யாகூ லியாஸ், தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஷாகித்(19), முகமது இர்பான்(18) ஆகியோர் எனத் தெரியவந்தது. 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் ஆபில், முகமது இர்பான், ஷாகித் ஆகியோர் கல்லூரி மாணவர்கள். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த செல்வபுரத்தைச் சேர்ந்த முகேஷ்குமார் என்பவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “இக்கும்பலின் தலைவராக முகேஷ்குமார் இருந்துள்ளார். இவர் அசல் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வந்தார். இவர்களிடம் இருந்து ரூ.1.86 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இதுவரை எவ்வளவு பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர், இதில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது” என்றனர்.