

பெருங்களத்தூர்: தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில், 46 கிலோ வெள்ளிப்பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்கள், 3 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து சுமார் 46 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொண்டு வந்த முகமது ஹுசைன் என்பவர், கடந்த 8-ம் தேதி இரவு 7.30 மணியளவில் பெருங்களத் தூர் பேருந்து நிலையத்தில்நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர், அவரது தலையின் பின்பகுதியில் வெட்டிவிட்டு, அவரிடமிருந்த வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பரங்கிப்பேட்டையில் கைது
இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கிடைத்த தகவல்கள், தடயங்களின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை சோதனை நடத்தி சமீர் (34), ரிஸ்வான் (27), இஸ்மாயில் (30), சாதிக் பாஷா(31), மன்ஷா (25), லாரன்ஸ் (28) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.
தலைமறைவான 2 பேருக்கு வலை
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 46 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 கார்கள், ஸ்கூட்டர், கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவாக உள்ள ஜமாலுதீன், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் கைது செய்ய தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.