விருதுநகரில் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.73 கோடி மோசடி செய்தவர் கைது

விருதுநகரில் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.73 கோடி மோசடி செய்தவர் கைது
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் 41 இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் எடுத்துத் தருவதாகவும் கூறி ரூ.2.73 கோடி மோசடி செய்ததாக திருமங்கலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (41). அரசு ஒப்பந்ததாரர். இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு இருக்கன்குடி இன்ஸ்பெக்டரின் ஜீப் ஓட்டுனர் ராஜபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காவலர் ராஜபாண்டி தற்போது சாத்தூர் டிஎஸ்பி ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். காவலர் ராஜபாண்டி திருமங்கலத்தில் உள்ள தனது சித்தப்பா மகன் சரவணகுமார் (45) என்பவர் சென்னையில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருவதாகவும் அவது தந்தை திருவள்ளுவன் திருமங்கலம் நகாட்சியில் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும் கூறி கண்ணனிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், சரவணக்குமார் தனக்கு அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும், எந்த அரசு வேலையாக இருந்தாலும் வாங்கிக்கொடுப்பதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பி கண்ணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 41 பேர் அரசு வேலைக்காகவும், அரசு ஒப்பந்தத்திற்காகவும் ரூ.2.73 கோடி பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வங்கி மூலமாகவும், நேடியகாவும் பணத்தைப் பெற்ற சரவணக்குமார் அரசு வேலை வாங்கிக் கொடுக்காமலும் அரசு ஒப்பந்தப் பணிகளை பெற்றுக்கொடுக்காமலும் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, விருதுநகரில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் கண்ணன் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து சரவணக்குமாரை இன்று கைதுசெய்தனர். மேலும், அவரது தந்தை திருவள்ளுவனைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in