தூத்துக்குடியில் யானை தந்தம் கடத்திய இருவர் கைது: 4 தந்தங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் யானை தந்தம் கடத்திய இருவர் கைது: 4 தந்தங்கள் பறிமுதல்
Updated on
1 min read

தூத்துக்குடியில் யானை தந்தம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர்கள் கஞ்சா விற்பனை தொடர்பாக இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கணேசன் நகர்ப் பகுதியில் ரோந்து சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 2 நபர்கள் போலீஸாரை கண்டதும் அவசர அவசரமாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த ராஜவேல் (33) மற்றும் முனியசாமி (43) என்பதும், மீன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவர்கள் வந்த இருச்சக்கர வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வாகனத்தில் பெட்ரோல் டேங்க் கவருக்குள் 4 யானை தந்தங்கள் இருந்தன. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த 4 யானைத் தந்த துண்டுகளையும் குலசேகரன்பட்டினத்தில் நாடோடி மக்களிடம் ரூ.3000-க்கு விலைக்கு வாங்கியதும், தொடர்ந்து அவற்றை தூத்துக்குடியில் அதிக விலைக்கு விற்க முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜவேல் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும், யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த யானைத் தந்தங்களை போலீஸார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in