

தியாகராய நகரில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருவள்ளூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, தியாகராயநகர், மூசா தெருவில், ‘உத்தம் நகை மாளிகை’ என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. கடந்த 21-ம் தேதி,இக்கடையின் பூட்டை உடைத்துஉள்ளே புகுந்த கொள்ளையன், உள்ளே இருந்த 4.125 கிலோதங்க நகைகள் உட்பட ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.
இதுகுறித்து மாம்பலம் காவல்நிலைய போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். கொள்ளையில் ஈடுபட்டவர், அங்கிருந்து யாருடனாவது போனில் பேசினாரா என சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், கொள்ளையில் ஈடுபட்டவருக்கு, புட்லூரில் இருந்து ஒருகுறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அம்மாவட்ட போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் பெண் ஒருவர் இருந்தது தெரிய வந்தது.மேலும் அவர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார் அவரை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர்.
அந்த பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற மார்க்கெட் சுரேஷை(44) பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் இந்த வழக்குதொடர்பாக தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.