

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே துப்புரவுப் பணியில் ஈடுபட்டபோது பலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய்யக் கோரி அப்பெண் கடலூர் எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அகரம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவர், இன்று (அக். 24) கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு புகார் மனு அளித்தார்.
இந்த மனுவில் கூறியுள்ளதாவது:
"நான் காட்டுநாயக்கன் வகுப்பைச் (பழங்குடி இனம்) சேர்ந்தவள். எனது கணவர் அகரம் ஆலம்பாடி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் கடந்த 17-ம் தேதி முதல் எனது கணவருக்குப் பதிலாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் என்னைப் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வந்து என்னைக் காப்பாற்றினார்கள். இதுகுறித்து நான் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அன்பழகனின் தம்பிகள் என்னைக் கீழ்த்தரமாக பேசி, 'காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை வாபஸ் வாங்காவிட்டால் உங்கள் சமுதாயத்தினரின் வீடுகளைக் கொளுத்திவிடுவோம், உன் கணவர் வேலையையும் காலி செய்துவிடுவோம்' என மிரட்டுகின்றனர்.
எனவே, என்னைப் பாலாத்காரம் செய்ய முயன்ற ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகனைக் கைது செய்ய வேண்டும். மிரட்டல் விடுத்த அவரது தம்பிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்".
இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.