

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுழற்சிமுறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஷசாங் சாய் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு சிலர் சட்ட விரோதமாக போதைப் பொருட்களை கடத்தி வர திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் அருகில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்துசோதனை செய்தனர். அப்போது,அதில் மூட்டை மூட்டையாக ரூ.40லட்சம் மதிப்புள்ள 5.5 டன் குட்காஉள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்தபோலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஓட்டுநர்விருதுநகர் மாவட்டம், காளையார்குறிச்சி முத்துராஜ், லோடு மேன்கள் விழுப்புரம், கானாங்காடுசிவராஜ், திருவண்ணாமலை செல்லாங்குப்பம் அரவிந்த் ஆகியோரை கைது செய்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து குட்கா புகையிலைப் பொருட்களை சென்னைக்கு கடத்தி வந்து அதை பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். இவர்களது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.