

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அடுத்தடுத்து 9 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை கீழ்ப்பாக்கம் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
சென்னை, சூளை, சாமிபிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் கன்னியம்மாள். இவர் வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி ஏடிஎம் கார்டு வைத்துள்ளார். கடந்த 12-ம் தேதிகன்னியம்மாளை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ‘‘வங்கி மேலாளர்பேசுகிறேன். உங்களது வங்கி கணக்கு, ஏடிஎம் கார்டு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால்உங்களது ஏடிஎம் கார்டு முடக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
இதனால், ஏடிஎம் கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் கன்னியம்மாள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.49,999 பணம் இணையதளம் மூலம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த கன்னியம்மாள் இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் கன்னியம்மாள் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு, மோசடி செய்யப்பட்டது குறித்து தெரிவித்து பணத்தை உரிய வழிகாட்டுதலின் படி கொடுக்கும்படி கடிதம் அனுப்பினர்.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தினர், கன்னியம்மாள் வங்கி கணக்கிற்குரூ.49,999-ஐ உடனடியாக செலுத்தினர். கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் கன்னியம்மாள் போல் 9நபர்கள் பணத்தை இழந்துள்ளதாகவும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து பணம்பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.