

கமுதி அருகே கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தை உடைத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சீமானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபால்(46). இவர் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, சீமானேந்தல் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் சென்றுள்ளார்.
அப்போது வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை எனக்கூறி, கோபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை வெட்டி சேதப்படுத்தினார். மேலும் அங்கிருந்த அலுவலர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கோபாலை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் நேற்று கோபாலுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.17,500 அபராதம் விதித்தும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.