

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒருவர் பலியானார். ரயில் தண்டவாளத்திலேயே சடலம் கிடந்ததால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில்களால் இரண்டு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
குழித்துறை அருகே உள்ள பாகோடு, கோவில்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சசி (44). கட்டிடத் தொழிலாளியான இவரது சடலம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், அதிகாலை 3.30 மணியளவில் வந்த குட்ஸ் ரயில் மோதி அந்த நபர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சடலத்தைக் கைப்பற்றிய நாகர்கோவில் ரயில்வே போலீஸார் அதனை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சசி தற்கொலை செய்துகொண்டாரா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சடலத்தை அப்புறப்படுத்தத் தாமதமானதால் வழக்கமாக ரயில்வே ஊழியர்களுடன் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாகச் சென்றன.