

சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இவருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், பழைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு கொடுப்பதாகவும் கூறி உள்ளனர். கார்டு பற்றிய விபரங்களை கேட்க அவரும் தெரிவித்துள்ளார். திடீரென அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் இருதயராஜ் புகார் அளித்தார். இருதயராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் எண்களை வைத்து போலீஸார் விசாரித்தனர். இதில், கோயம்பேட்டைச் சேர்ந்த 28 வயதான மென் பொறியாளர் கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு தனியார் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய பிரிவில் கார்த்திகேயன் வேலை பார்த்து இருக்கிறார். வங்கியில் இருந்து பேசுவதாக இருதயராஜின் கிரெடிட்கார்ட்டை முதலில் பிளாக் செய்துள்ளார்.
பின்னர் அவரது பெயரில் அவருக்குத் தெரியாமலேயே புதிதாக ஒரு கிரெடிட் கார்டை வங்கியில் விண்ணப்பித்து, அதை கொரியர் அலுவலகத்துக்கே சென்று கையெழுத்து போட்டு வாங்கி உள்ளார். பின்னர் இருதயராஜ் போன்று வங்கியிலும், வங்கியில் இருந்து பேசுவதுபோல் இருதயராஜிடமும் பேசி புதிய கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை பெற்று ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.